மருதமலை அருகே குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை
மருதமலை அருகே குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.;
கோவை வன சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொடர்ந்து ஒரு யானை பிளிரும் சத்தம் கேட்டு, அந்த பகுதிக்கு சென்ற வனப்பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் அப்பகுதியில் பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும், குட்டி யானை அருகில் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட யானையுடன் நான்கு மாத ஆண் குட்டி யானையும் இருந்து வந்தது.
இதனிடையே குட்டி யானை அப்பகுதியில் இருந்த காட்டு யானைக் கூட்டத்துடன் வனப்பகுதிக்குள் சென்றது. உடல் நலம் தேறியதை அடுத்து, பெண் யானையை கிரேன் வாகனத்தின் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்டு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது. ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த யானையின் உடல் நலம் சீரானதை தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை காட்டிற்குள் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் குப்பேபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாக்குத்தோப்பில் தாயை பிரிந்து சென்ற குட்டி யானை இருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் அந்த குட்டி யானையை, தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தாய் யானை அருகில் உள்ள பகுதியில் இருப்பதால், அதனுடன் குட்டி யானையை சேர்க்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈபட்டு வருகின்றனர்.