பொங்கல் விழாவில் நடனமாடிய கோவை மாவட்ட ஆட்சியர்
Coimbatore News- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் நடனமாடியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.;
Coimbatore News, Coimbatore News Today- தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பண்டிகையாக இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமரிசையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்தபடி வந்து ஆட்சியர் அலுவலகத்தில் கோலமிட்டு பொங்கல் வைத்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, சக ஊழியர்களுடன் இணைந்து கோலமிட்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றார். புது பானையில் பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள், அதிகாரிகள் ஜமாப் இசைக்கு ஏற்றபடி நடனமாடி உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து துறை அதிகாரிகளும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிலையில் ஊழியர்களுக்கு கயிறு இழுத்ததல், உறி அடித்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார். அப்போது மாடுகளுக்கு உணவுகளை வழங்கினார். பின்னர் ஜமாப் இசைக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நடனமாடி மகிழ்ந்தார். இது அரசு ஊழியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.