பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
நீண்ட மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.;
கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பொள்ளாச்சியை சேர்ந்த அருளானந்தம், ஹேரென்பால், பாபு, அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்தது. 9 பேர் மீதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி, மானபங்கம் செய்தல், பெண்கள் கடத்தல், ஆபாச வீடியோ பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துங்கள் உள்ளிட்ட 10 சட்டப் பிரிவுகளில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. 8 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்காக தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
நீண்ட மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கைது செய்யப்பட்டவர்கள் சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை நடைப்பெற்று வந்தது.
இந்நிலையில் இன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரையும் காவல் துறையினர் நேரில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள வீடியோக்களை வழக்கறிஞர் முன்னிலையில் ஒளிபரப்பு செய்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.