இரண்டு குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை
Coimbatore News- பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் காரமடை பகுதியில் கடந்த டிசம்பர் 11 ம் தேதி சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் கலப்பட மதுபானம் தயாரித்து விற்பனை செய்ய வைத்திருந்த காரமடை பகுதியை சேர்ந்த அய்யனார் என்கிற சையத் அலி (46) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்தபரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சையத் அலி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் சையத் அலி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் @அப்புச்சி (22) என்பவரை கோவில் பாளையம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது கோவை மாநகர் பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இந்நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அந்த நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் பேரில் சந்தோஷ் குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.