கோவை பேரூர் அருகே கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை
தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் வசிப்பவர் விஜய் கிங்ஸ்லி (வயது30). திருச்செந்தூரைச் சேர்ந்த இவர், குடும்பத்துடன் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இவரது மனைவி செலின் ரேச்சல் (29). இவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சி.எல்.பி. பிரிவில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு இரு வீட்டினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. இவர்களுடன் விஜய்யின் தாயாரும் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் கிங்ஸ்லி நேற்று காலை அலுவலக வேலையாக வெளியே சென்று விட்டார். பிற்பகல் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் பலமுறை கதவையும் தட்டியும் திறக்கவில்லை. மேலும் குழந்தையின் அழுகுரல் சத்தம் மட்டும் வீட்டிற்குள் இருந்து கேட்டு இருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவி வீட்டை பூட்டி விட்டு உள்ளே இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கூறி உள்ளார். அதன் அடிப்படையில் காவலர்கள் அவரது வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது செலின் ரேச்சல் படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய பேரூர் காவல் துறையினர் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.