ஆவின் பால் விற்பனை 25% அதிகரிப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ்
“ஆவின் நிர்வாகம் முன்னேற்றத்தை நோக்கி சென்று வருகிறது. பால் விற்பனை 25% அதிகரித்துள்ளது”;
கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஆவின் நிர்வாகம் முன்னேற்றத்தை நோக்கி சென்று வருகிறது.கடந்த காலங்களில் பால் கொள்முதலில் ஏற்பட்ட தொய்வு நிலையில், இதுவரையில் 36 லட்சம் பால் ஒன்றியங்கள் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு விவசாயிகளை ஊக்குவிக்க, 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கல், பால் உற்பத்தியாளர்கள் தரத்தை அந்த இடத்திலேயே தரம் நிர்ணயம் செய்து விலை கொடுப்பது, கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் உதவி, கடனுக்கான வட்டி குறைந்தது 125 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு வட்டியில்லா கடன் ஆகிய திட்டங்களால் ஏற்பட்ட மாற்றத்தால் பால் கொள்முதலில் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளின் மானியத்துடனான கடனாக கொடுக்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
குறைந்தபட்சம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் காப்பீடு திட்டத்தில் கொண்டு வர 85% அரசு பங்களிப்புடன் மேற்கொள்ள தீவிரப்படுத்த உள்ளோம். ஓரிரு வாரங்களில் 40 லட்சத்தை கொள்முதல் கடந்து தன்னிறைவை கொண்டு வர முடியும். பால் கையாளும் திறனை 70 லட்சமாக உயர்த்த கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. எவ்வளவு பால் வந்தாலும் அதனை கையாளும் திறனை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதும் மேய்ச்சல் நிலம் இல்லாத நிலை உள்ளது. விளை நிலங்கள், காலியான நிலங்கள் பல்வேறு நிறுவனங்கள், வீடுகளாக மாறி மேய்ச்சல் நிலம் குறைந்து வருகிறது. இருக்கக்கூடிய மேய்ச்சல் நிலம், விவசாயிகளின் நிலங்களும் நல்ல மகசூல் தரக்கூடிய தீவனம் பயிர்களை பயிரிட திட்டங்களையும், ஊறுகாய் புல் என சொல்லக்கூடிய தீவன பயிரை எங்கெங்கு அதிகமாக விலைச்சல் செய்ய முடியுமா அதை செய்து, மலிவு விலையில் விவசாயிகளுக்கு கொடுக்கும் திட்டமும் இந்தாண்டு கொண்டு வருவதற்கு ஈரோட்டில் திட்டமிடப்பட்டு வருகிறது.
பால் விற்பனை 25% அதிகரித்துள்ளது. நெய் போன்ற பொருட்கள் நீண்ட நாட்கள் தாங்கக்கூடிய குணம் உள்ளிட்டவைகள் பற்றி ஆராய்ந்து புதிய வியூகங்களை வகுத்து வருகிறோம். கிடாரி கன்றுகளை ஈனும் சினை ஊசி ஆரோக்கியமான பழக்கம் என நான் சொல்ல மாட்டேன். தமிழகத்தில் காளை கன்றுகளுக்கு உழவு, உணவு ஆகியவைகளுக்கு மிக தேவை உள்ளது. அதையும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளதால், விவசாயிகளுக்கு தேவை என்ற அடிப்படையில் கொடுத்து வருகிறோம். மேலை நாடுகளில் ஒரு மாடு 32 லிட்டர் தரும் நிலையில், நமது நாடுகள் 5-6 லிட்டர் தருவதை 10-15 லிட்டராக உயர்த்தினால் விவசாயிகளுக்கு பலன் தரும். அதற்காக தான் நமது நாட்டு இனங்களை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம். 159 தரமான காளைகள் வைத்துள்ளோம்.
கிடாரி கன்றுகளை ஈனும் சினை ஊசி 2021 வரை 4-5 லட்சம் வரை ஊசி கொடுத்தோம். கடந்தாண்டு 16 லட்சம் கொடுத்ததை அடுத்து, இந்தாண்டு 20 லட்சம் இலக்கு நிர்ணயித்துள்ளோம். வறட்சி காலங்களில் நல்ல இனங்கள் கொடுத்தால் தான் விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்க முடியும் என்பதால், இந்தாண்டு செயல் திட்டங்களில் வலுவாக திட்டமிட்டு வருகிறோம். அமுல் நிறுவனம் விவாதத்திற்கான பொருளே கிடையாது. உலகமயமாக்கல் பின் இங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். நமது பொருட்கள் தேவை உள்ளது, மக்கள் வரவேற்பு உள்ளதால் நமது கவலை கொள்ள தேவையில்லை. ஆவின் முடிந்ததாக சொன்ன நிலையில் தற்போது 36 லட்சம் கொள்முதல் எப்படி செய்ய முடிந்தது?
விற்பனை அதிகரிப்பு, தரமான கன்று இனங்கள் கொடுக்கிறோம், காப்பீடு, கடன் உதவி, கால்நடைகள் பராமரிப்பு என தொடர் நடவடிக்கை எடுத்து வருவதால் கொள்முதலில் பாதிப்பு ஏற்படாது என ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறேன். விற்பனை, தரம், விலை ஆகியவை ஒரே மாதிரியான செயல்முறைகள் திட்டம் வரவேற்பு உள்ளதால் எந்த பிரச்னையும் இருக்காது. மாற்றுத்திறனாளிகள், வேலை இல்லாதவர்கள், திருநங்கைகள் என ஆவின் கடை நடத்தி அனுமதி கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் இன்னமும் கடைகள் இல்லாத இடங்களில் ஆவின் நிர்வாகத்தின் கிளைகள் அதிகரிக்க தேவை உள்ளது, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.