மாதவரத்தில் மதுபோதையில் இருசக்கர வாகனங்களுக்கு தீவைப்பு: இருவர் கைது
மாதவரத்தில் குடிபோதையில் வம்பு சண்டை, அடிதடியில் ஈடுபட்டு இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கணபதி தோட்டத்தில் வசிப்பவர் ஆல்பர்ட் (வயது 47). இவர் ஆன்லைனில் வாகனங்கள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார்.
நேற்று இரவு இவரது வீட்டின் அருகே குடிபோதையில் தாறுமாறாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இவரது வீட்டின் முன்பு போதையில் விழுந்தனர். இதனால் ஆல்பர்ட் அவர்களை ஏன் இதுபோல் குடித்து விட்டு வருகிறீர்கள் பார்த்து ஓட்டி செல்லுங்கள் என அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கியுள்ளனர். பின்னர் அருகிலுள்ளவர்கள் கூடியதும் அவர்கள் அவ்விடத்தில் இருந்து சென்று விட்டனர்.
பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் குடிபோதையில் இருந்த நபர்கள் மறுபடியும் அவரது வீட்டிற்கு வந்து கற்களை வீசி ஜன்னல் கண்ணாடிகளை நொறுக்கி அருகில் இருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி தாங்கள் தயாராக வைத்திருந்த பெட்ரோலை வீட்டின் முன்பு நிறுத்தி வைதக்கப்பட்டிருந்த ஆல்பர்ட் அவர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தின் மீது ஊற்றி கொளுத்தினர். இதனால் இருசக்கர வாகனத்தில் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் சப்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழுந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் வாகனம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. அதற்குள் அந்த இடத்தை விட்டு மர்மநபர்கள் மறைந்தனர்.
இதுபற்றிய தகவல் மாதவரம் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் வழக்கு பதிவு செய்து அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து சென்னை திருவிகநகர், கென்னடி சதுக்கம் 3 வது தெருவை சேர்ந்த ராஜேஷ் (வயது 25) வியாசர்பாடி சத்தியவானி முத்துநகரை சேர்ந்த பாலாஜி ( வயது 29) ஆகிய இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். நள்ளிரவில் குடிபோதையில் நபர்களால் வாகனம் தீவைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.