பெண் விவகாரத்தில் பீர் பாட்டிலால் இளைஞரை தாக்கிய மூன்று பேர் கைது

காதலியுடன் பேசுவதை தட்டி கேட்டபோது தடுக்க வந்த நண்பர் மீது பீர் பாட்டில் தாக்குதல் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-04-16 10:04 GMT

கைது செய்யப்பட்ட மூவர்.

புழல் அருகே காதலியுடன் பேசுவதை தட்டி கேட்ட போது தடுக்க வந்த நண்பர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், புழல் அடுத்த புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் துர்கேஷ் ( வயது 23). இவரது தந்தை நடத்தி வரும் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நிறுவனத்தில் தினேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தினேஷை அவரது நண்பர் சாமிநாதன் என்பவர் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என கூறி வருமாறு செல்போனில் அழைத்துள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் தினேஷை, துர்கேஷ் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு தனியாக நின்றிருந்த மூவரிடம் தினேஷ் சென்று பேசியுள்ளார்.

அதில் சாமிநாதன் என்பவர் பெண் ஒருவரை சுமார் இரண்டு ஆண்டுகளாக காதலிப்பதாகவும், அந்த பெண்ணிடம் தினேஷ் பேசுவது பிடிக்கவில்லை என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். தினேஷிடம் தகராறில் ஈடுபடுவதை தட்டி கேட்ட துர்கேஷை மூவரும் சேர்ந்து பீர் பாட்டிலால் சரமாரியாக தலையில் தாக்கி உடைந்த பாட்டிலில் கழுத்தில் குத்தியுள்ளனர். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த துர்கேஷை மீட்ட தினேஷ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக துர்கேஷ் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக புத்தகரத்தை சேர்ந்த சாமிநாதன் ( வயது 25), கோயம்பேட்டை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அஸ்வின்குமார் ( வயது 25), புத்தகரம் சேர்ந்த எபினேசர் ( வயது 25). ஆகிய மூவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News