நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் சரண்

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவனே மனைவியை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் புழல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2022-02-28 01:15 GMT

 இளங்கோவன்-வெண்ணிலா

சென்னையை அடுத்த புழல் எம்ஜிஆர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 31) இவர் எலெக்ட்ரிசியன் ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலா( வயது 25 ) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து குழந்தைகளுடன் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவன் பாரிமுனையில் உள்ள ஒரு கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்வதற்காக சென்றார். அப்போது புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த வெண்ணிலா (வயது 30 ) என்ற பெண் பாரிமுனையில் உள்ள வீடுகளில் வேலை செய்துவந்தபோது வெண்ணிலாவுக்கும் இளங்கோவனுக்கும் தொடர்பு ஏற்பட்டது.

வெண்ணிலா ஏற்கனவே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து தனிமையில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இருவரது நிலைமையும் ஒன்றாக இருந்ததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து புழல் எம்ஜிஆர் நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

வெண்ணிலா தனது பிள்ளைகளை பார்ப்பதற்காக செல்ல வேண்டுமென்று இளங்கோவனிடம் கூறினார். இதன் காரணமாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் இளங்கோவின் தாத்தா தமிழ்தாசன் (வயது 68 ) என்றவரிடம் இருவரும் முறையிட்டனர். அவரும் இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பிய நிலையில், மறுபடியும் இவர்களுக்குள் சண்டை மூண்டதில் முதல் கணவரை வெண்ணிலா சந்திக்க செல்கிறார் என சந்தேகத்துடன் சண்டையிட்டு ஆத்திரமடைந்த இளங்கோவன் திடீரென தன்னிடமிருந்த ஒயர்கள் அறுக்கும் சிறிய கத்தியால் வெண்ணிலாவை கழுத்தில் வெட்டினார். வெட்டுப்பட்டு இரத்த வெள்ளத்தில் அலறியபடி பக்கத்தில் உள்ள விட்டு முற்றத்தில் மயக்கம் அடைந்து கீழே சாய்ந்தார்.

இதனை கண்ட அருகிலுள்ளவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் பரிதாபமாக போகும் வழியிலேயே உயிரிழந்தார்.

மனைவியை வெட்டிவிட்டு இளங்கோவன் நேராக புழல் காவல் நிலையத்தில் சரண் அடைந்து விபரங்களை கூறினார். பின்னர் இதுகுறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் சோபனா வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இளங்கோவனை கைதுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News