இலங்கை கைதிகள் உண்ணாவிரதம்: சிறைத்துறை மறுப்பு

புழல் சிறையில் இலங்கை கைதிகள் உண்ணாவிரதம் இருக்கவில்லை என சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2024-05-26 08:15 GMT

புழல் சிறை

சென்னை புழல் மத்திய சிறையில் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல், தீவிரவாத செயல் என பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு கைதிகளும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இலங்கையை சேர்ந்த புஷ்பராஜா என்கிற பூக்குட்டிகண்ணா (45) புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இவர் பதுக்கி வைத்திருந்த செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் கைதிகளை சிறையில் அடைக்கும் போது தகராறு செய்து சிறை காவலர்களை பணி செய்ய விடாமல் மிரட்டல் விடுத்ததாக புழல் காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் புஷ்பராஜாவை சிறையில் சந்தித்த அவரது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சிறை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது புழல் சிறையில் இலங்கை கைதிகள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாகவும், முறையான உணவு வழங்கப்படாததால் தங்களது உறவினரான புஷ்பராஜ் உட்பட இலங்கை கைதிகள் சிலர் 3நாட்களாக சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்து வருவதாக கூறினர்.

தமது உறவினர் புஷ்பராஜ் உடல்நல குறைவுடன் இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு எனவும், குடும்பத்தின் கதி என்ன எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் சிறைஅதிகாரிகள் கைதிகளை தாக்குவதாகவும் அப்போது புகார் தெரிவித்தனர். இலங்கை கைதிகள் பாரபட்சம் தொடர்பாக சிறைத்துறை டிஜிபியிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.

பிற நாடுகளை சேர்ந்த கைதிகளுக்கு கொடுக்கும் வகையிலான உணவுகள் இலங்கை கைதிகளுக்கு வழங்காமல் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். உடனடியாக இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே புழல் சிறையில் கைதிகள் யாரும் உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை என சிறைத்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கைதிகளுக்கும் வழக்கம் போல உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், உண்ணாவிரதம் தொடர்பாக கைதிகள் யாரும் சிறைத்துறைக்கு மனு அளிக்கவில்லை எனவும் சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News