3 ஆயிரம் ஆசிரியர்கள் ஊதியம் பெற நிரந்தர ஆணை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை
3 ஆயிரம் ஆசிரியர்கள் ஊதியம் பெற நிரந்தர ஆணை வழங்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் அருணன் கோரிக்கை விடுத்துள்ளார்.;
3000 ஆசியர்கள் ஊதியம் பெற நிரந்தர ஆணை வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் அருணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் அருணன் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த ஆண்டு 92 அரசாணையின் படி மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்த காரணத்தால் உயர்நிலை மேனிலைப்பள்ளிகளில் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் புதியதாக 3000 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர் .அவர்கள் ஊதியம்பெற நிரந்தர ஆணை வழங்காமல் ஓராண்டிற்கு மட்டும் ஊதியம்பெற ஆணை வழங்கப்பட்டது. அந்த ஆணை பிப்ரவரி (2023) மாதம் முடிந்துவிட்டது, மாரச் மாதத்தில் இருந்து குறித்த நேரத்தில் ஊதியம்பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,
ஏற்கெனவே பணியிடம் மாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு மூன்று மாதங்கள் காலதாமதத்திற்கு பிறகு தான் ஊதியம் பெற்றுத்தரப் பட்டது என்பதை நினைவுப்படுத்துகிறோம் எதற்காக இதை குறிப்பிட்டு காட்டுகிறோம் என்றால் வீட்டுக்கடன் முன் பணம், தனிக்கடன் பிள்ளைகளுக்கான கல்விக் கடன் என அனைத்து கடனும் ஊதியத்தில் இருந்து தான் பிடித்தம் செய்யப்படுகிறது. தவணை முறையில் ஒருநாள் தவறினாலே வட்டி குட்டி போட்டுவிடுகிறது.
இதனால் ஆசிரியர்கள் மிகவும் சிரமப் படும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்நிலையை தீர்க்கும் விதமாக 3000 ஆசிரியர்களுக்கும் ஊதியம்பெற சென்ற ஆண்டை போன்று காலதாமதம் ஏற்படுத்தாமல் ஓராண்டிற்கு தற்காலிக ஆணை வழங்குவதை தவிர்த்து நிரந்தர ஆணை வழங்கி உதவிட பள்ளிக் கல்வி துறைஅமைச்சர் அவர்களையும் , பள்ளிக்கல்வி செயலர் அவர்களையும் , ஆணையர் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊழியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.