குண்டும் குழியுமாக மாறிய சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை.
தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி அருகே அரசு சார் பதிவாளர் அலுவகம் செல்லும் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்;
திருவள்ளூர் மாவட்டம். மாதவரம் சட்டமன்ற தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி அருகே அரசு சார் பதிவகம் அலுவலகத்திற்கு செல்லும் சாலை தற்போது போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாகவும் மற்றும் குளம் குட்டையாக மாறி படு மோசமாக சிதிலமடைந்து காட்சியளிக்கிறது.
இந்த சாலையை ஒட்டி அரசு கிராம நிர்வாக ஆய்வாளர் அலுவலகம் மற்றும் அரசு கால் நடை மருந்தகம் அலுவலகம் ஆகியவை இயங்கி வருகிறது. அத்துடன் செங்குன்றம் நாரவாரிகுப்பம், புழல், தீர்த்தக்கிரியம்பட்டு, புள்ளிலையன், பாடியநல்லூர், கும்மனூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மேலும் இந்த சாலைவழியாக தினமும் நிலம் வாங்குபவர்கள், விற்கபடுகிறவர்கள் சார் பதிவகத்தில் ஆவணங்களை பதிவு செய்ய ஒரு நாளைக்கு 200 டோக்கன் வீதம் ஒன்று முதல் ஆறு நபர்கள் கொண்ட சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர்.
அதேபோல் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கால் நடை மருந்தகம் ஆகிய அலுவலகத் திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் இந்த சாலை பெரிய பள்ளங்கள் உருவாகி தற்போது பெய்த மழைநீரால் குளமாக தேங்கி உள்ளது. இந்த சாலைவழியாக இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் செல்போர்கள் மழைநீர் தேங்கி உள்ள பள்ளங்களில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி பாதிக்கப்ப டுகின்றனர்.
அதனால் இச்சாலையை பயன்படுத்தும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்து இதுவரை எந்த நடவடிக்கைகள் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. எனவே இந்த குளம் மாறிய சாலையை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்று வட்டார கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இச்சாலையை உடனடியாக சீரமைக்காவிட்டால் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளனர்.