செங்குன்றத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் அலுவலகம் திறப்பு
செங்குன்றத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தை துணை ஆணையர் அன்பு திறந்து வைத்தார்.;
செங்குன்றத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தை துணை ஆணையர் அன்பு திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விபத்து வழக்குகளை பதிவு செய்து, விசாரணை செய்யும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி முதல் புதிதாக துவங்கப்பட்டது. இதன் அலுவலகம் மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்தது.
இதனுடைய எல்லை செங்குன்றம், சோழவரம், மீஞ்சூர், காட்டூர், திருப்பாலைவனம், மணலி புதுநகர், பொன்னேரி. மாதவரம் பால்பண்ணை, மணலி, மணலி புதுநகர், சாத்தங்காடு, எண்ணூர், பொன்னேரி, அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர் உள்ளிட்ட 14 காவல் நிலையங்களை உள்ளடக்கியது. சுமார் 50 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. சாலை வாகன விபத்து நடக்கின்ற இடத்திற்கு உடனடியாக செல்ல முடியாமல் காவலர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம் செங்குன்றம் பிடபிள்யூடி தெரு, காவலர் படை குடியிருப்பு இரண்டாவது மாடியில் உள்ள புதிய அலுவலகத்தை ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் அன்பு தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி போக்குவரத்து பிரிவு உதவி ஆணையர் பிராங்கிளின் ரூபன், செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் பிரபாகரன், வழக்கறிஞர்கள் தேவராஜ், பொத்தூர் மாரி, செங்குன்றம் கார்த்திக், மற்றும் தங்கவேல், சரவணன், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.