புழல் சிறையில் போதை மாத்திரை, கஞ்சா பறிமுதல்

சென்னை புழல் மத்திய சிறையில் காவலர்கள் சோதனையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2024-09-19 14:30 GMT

படம்

சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்ப்பதற்காக உறவினர்கள், நண்பர்கள் என நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சிறைக்கு வந்து பிஸ்கட், பழம், ஆடைகளை வழங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், நங்கநல்லூரை சேர்ந்த பார்த்திபன் வழிப்பறி வழக்கில் பழவந்தாங்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக இவரது தம்பி பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் இருவர் புழல் சிறைக்கு வந்துள்ளனர். அப்போது தமது அண்ணனிடம் கொடுத்து விடுமாறு பிஸ்கட், பழங்கள் அடங்கிய பையை சிறை காவலர்களிடம் கொடுத்துள்ளார். சிறை காவலர்கள் பையை சோதனை மேற்கொண்ட போது அதில் பேரீச்சம் பழத்திற்குள் உள்ள கொட்டையை எடுத்து விட்டு அதற்குள் போதை மாத்திரைகளை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போதை மாத்திரைகளை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதே போல ஆலந்தூரை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் கிண்டி காவல் நிலைய அடிதடி வழக்கில் புழல் சிறையில் உள்ளார். இவரை பார்ப்பதற்காக இவரது நண்பர் பிரவீன் சிறைக்கு வந்து பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை கொடுத்துள்ளார்.

சிறை காவலர்கள் சோதனையில் பேண்டிற்குள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கஞ்சாவை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவங்கள் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த இருவேறு புகார்களின் பேரில் புழல் போலீசார் சிறைக்குள் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், கஞ்சாவை கடத்த முயன்றதாக விசாரணை கைதிகள், உறவினர்கள் மீது இருவேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News