நல்லூர் ஊராட்சி ஸ்ரீ சோலையம்மன் முனீஸ்வரர் ஆலய தீமிதி திருவிழா
செங்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சி ஸ்ரீ சோலையம்மன் முனீஸ்வரர் ஆலயத்தில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி சோலையம்மன் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சோலையம்மன் முனீஸ்வரர் ஆலயத்தில் 40-ம் ஆண்டு சித்திரை தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கணபதி ஹோமத்துடன் கொடியேற்றம், அம்மனுக்கு மூன்று நகர் மாதர்களின் புனிதகலசநீர் அபிஷேகம், நெய்வேத்தியம், காப்புக்கட்டுதல், கரகம் எடுத்தல் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மூலவர் சோலையம்மனுக்கு வாசனை திரவியங்கள் மற்றும் பால் அபிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரதம் இருந்த காப்புக்கட்டிய சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீகுண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர்.
மேலும் பெண்கள் பொங்கல் வைத்தும், அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் ஆலய நிர்வாகிகள் உள்ளிட்ட சுற்றுவட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்.
இத்திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நற்பணி மன்றங்கள் சார்பில் 5 நாட்கள் அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் பக்தர்களுக்கு வழங்கினர். அதேபோல் இன்னிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் அம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாள வானவேடிக்கைவுடன் திருவீதி உலா நடைபெற்றது.