அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-11-16 01:15 GMT

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதயத்தில் 4அடைப்புகள் இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நேற்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் உடனடியாக காவல்துறை ஆம்புலன்ஸ் மூலமாக பலத்த பாதுகாப்புடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததின் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News