மாதவரத்தில் ஆவின் பால் பாக்கெட்டில் குறைவான விலை அச்சடிப்பு : நடவடிக்கை கோரி பால் முகவர்கள் நலச்சங்கம் கோரிக்கை

மாதவரத்தில் ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட்டின் விலை அதிகபட்ச விலையை விட குறைவான விலை அச்சிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-24 10:49 GMT

பைல் படம்

சென்னை : மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட்டின் விலை அதிகபட்ச விலையை விட குறைவான விலை அச்சிடப்பட்டதால் பால் முகவர்களுடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆவின் நிர்வாக இயக்குனர் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத்தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவரது மனுவில் கூறியிருப்பதாவது : மாதவரம் ஆவின் பால் பண்ணையில் இருந்து வடசென்னையின் கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் இன்று (24.06.2021) காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் நிலைப்படுத்தப்பட்ட (கிரின் மேஜிக்) பால் பாக்கெட்டில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (MRP) 22.00ரூபாய்க்கு பதில் 18.50 (மாதாந்திர அட்டைதாரர்களுக்கு 21.00க்கு பதிலாக 18.00) என அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆவின் பால் விற்பனை விலை குறைப்பில் இருந்து பல்வேறு குளறுபடிகள், குழப்பங்கள் காரணமாக பால் முகவர்கள், நுகர்வோர் இடையே ஆவின் பால் விற்பனை விலை தொடர்பாக பிரச்சினைகள் எழுந்து வரும் சூழலில் தற்போது இப்படி ஒரு குழப்பமான செயல்பாடுகளால் பொதுமக்கள் மற்றும் பால் முகவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எனவே தவறுக்கு காரணமானவர்கள் மீது ஆவின் நிர்வாக இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News