புழல் சிறையில் பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள்: உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம்

புழல் மத்திய சிறையில் பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிக்காக அவரது மனைவியிடம் பேரம் பேசியதாக உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-02-07 04:30 GMT

பப்ஜி மதன்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்குட்பட்ட சென்னை புழல் சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவி, சிறைத்துறை அதிகாரியிடம் லஞ்சம் கொடுப்பதாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி, பெண்களிடம் ஆபாசமாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்து தருவதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் மதனின் மனைவி கிருத்திகாவிடம் பேரம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில், சிறைத்துறை அதிகாரி குறிப்பிட்ட தொகையை சில நாட்களில் தாம் ஏற்பாடு செய்துவிடுவதாக கிருத்திகா கூறியுள்ளார். இதுதொடர்பாக முகில் செல்வம் என்ற பெயரில் கூகுள் பே செயலி மூலமாக 25 ஆயிரம் ரூபாய் அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறைத்துறை டி.ஐ.ஜி. தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பணம் கேட்டது உண்மை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால் தற்போது புழல் சிறை உதவி ஜெயிலர் செல்வம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News