பாடியநல்லூர் முனீஸ்வரர் கோவிலில் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்
பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவிலில் பரிவார தெய்வங்களின் சன்னதிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவிலில் பரிவார தெய்வங்களின் சன்னதிக்கு மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பாடியநல்லூரில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களான விநாயகர், கருப்பசாமி, நாகராஜன், பெரியகருப்பு, சின்ன கருப்பு, சங்கிலி கருப்பு, பேச்சியம்மாள் ஆகிய சன்னதிகள் புனரமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆலய வளாகத்தில் சிவாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து கடந்த 3 நாட்களாக கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து புதிய சிலை பிரதிஷ்டை, கண் திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவையும் நடைபெற்றன. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தினர்.
கலசத்தில் பல நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கொண்டு ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பரிவார தெய்வங்களின் சன்னதியின் கோபுர கலசத்திற்கு புனிதநீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.