நல்லூர் ஊராட்சியில் ஸ்ரீ வாலேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்
நல்லூர் ஊராட்சியில் ஸ்ரீ வாலேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சி வீரபாண்டி நகரில் எழுந்தருலியுள்ள அருள்மிகு. ஸ்ரீ வாலேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா ராம்ஜி முன்னிலையில் ஜெயந்தி-செல்வராஜ் குடும்பத்தினர்கள் ஏற்பாட்டில் ஸ்ரீம் அகத்திய சிவ சித்தர் அய்யா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விநாயகர் பூஜையுடன் கணபதி ஹோமம், சங்கல்பம், கன்னியாபூஜை, பிரம்மச்சாரி பூஜை, சுமங்கலி பூஜை, வாஸ்து சாந்தி,பிரவேசபலி, மந்திர ஸ்தாபனம், அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாத்ராதானம் மற்றும் முதல் இரண்டு கால யாகசாலை பூஜை, மருந்து சாற்றுதல், பூர்ணாஹீதி போன்ற பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தங்களது சிறசில் சுமந்து மேளதாளத்துடன் ஆலய மாடவீதி உலாவந்து வேதமந்திரங்கள் ஓத விமானம் மற்றும் ஸ்ரீ வாலேஸ்வரி அம்மன், ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ விஸ்வரூப வீர ஆஞ்சநேயர், ஸ்ரீ காலபைரவர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள மூலவருக்கு பால்,தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது,தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பட்டு உடைகளாலும், வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவிற்கு ஆலய நிர்வாகிகள், திருபணிக்குழு பொறுப்பாளர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினர்.