வங்கியில் இருந்து பேசுவதாக கூறி இரு வேறு நபர்களிடம் பணம் மோசடி
புழலில் இருவேறு நபர்களிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரூ.80640 நூதன மோசடி செய்யப்பட்டது.;
புழலில் இருவேறு நபர்களிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரூ.80640 நூதன மோசடி செய்தவர்கள் மீது 2பிரிவுகளில் 2வழக்குகள் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் புழலை சேர்ந்த கமல் (27) என்பவர் தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகிறார். அண்மையில் இவரது செல்போனிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் வங்கியில் இருந்து பேசுவதாகவும், நீங்கள் பயன்படுத்தி வரும் கிரெடிட் கார்டில் கடன் தொகையை அதிகரித்து தருவதாக கூறியுள்ளார். முதலில் கமல் தயங்கிய நிலையில் உங்களுடைய கடன் மதிப்பீட்டை பாதிக்காது என கூறி சமரசம் செய்ததால் கமல் தன்னுடைய கடன் அட்டையின் முழு விவரங்களை கூறியுள்ளார். சிறிது நேரத்தில் இரண்டு தவணைகளாக அவரது கணக்கில் இருந்து ரூபாய் 12,800 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கமல் வங்கிக்கு தொடர்பு கொண்டு தமது கடன் அட்டையை முடக்கினார். இதே போல புழலை சேர்ந்த பாலச்சந்தர் (41) என்பவர் தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கும், கடன் அட்டையும் வைத்துள்ளார். அண்மையில் இவரது செல்போனிற்கு வந்த அழைப்பில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என கூறி அனுப்பிய லிங்கை அழுத்தியுள்ளார். உடனடியாக பாலச்சந்தருடைய வங்கி கணக்கு மற்றும் கடன் அட்டையில் இருந்து ரூ.67840 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலசந்தர் வங்கிக்கு தொடர்பு கொண்டு தமது வங்கி கணக்கு, கடன் அட்டையை முடக்கினார்.
ஆன்லைனில் ரூ.80640/- மோசடி செய்த இருவேறு சம்பவங்கள் தொடர்பாக இருவரும் புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மோசடி, தொழில்நுட்ப சட்டப்பிரிவு என இரண்டு பிரிவுகளில் 2வழக்குகள் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.