புழல் அருகே 2ம் நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியால் பரபரப்பு
புழல் அருகே நீர் நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணி இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.;
சென்னை புழல் இரட்டை ஏரிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவின் பேரில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளை அப்புறப்படுத்தி கொள்ளுமாறு ஏற்கனவே நோட்டிஸ் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணிகளில் அதிகாரிகள் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர். எம்ஜிஆர் நகர் பகுதியில் நேற்று சுமார் 75 வீடுகள் நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தி கட்டப்பட்டிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் காவல்துறை உதவியுடன் அகற்ற சென்ற போது இளைஞர்கள் சிலர் தீக்குளிக்க முற்பட்டனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
தொடர்ந்து 2வது நாளாக காஞ்சி நகர் பகுதியில் நீர்நிலைப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 6 மீன் பண்ணை அகற்றும்பணி நடைபெற்று வருகிறது. ஒருசிலர் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்ட நிலையில் எஞ்சிய வீடுகளை ஜெசிபி இயந்திரத்தின் உதவியோடு அதிகாரிகள் இடித்து ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.