தனியார் நிறுவன பெண் ஊழியரின் ஏ.டி.எம். கார்டில் பணம் மோசடி
தனியார் நிறுவன பெண் ஊழியரின் ஏ.டி.எம். கார்டில் பணம் மோசடி;
புழல் அருகே தனியார் நிறுவன பெண் ஊழியரின் ஏ.டி.எம். கார்டு செயலிழக்க உள்ளதாக வங்கி மேலாளர் என பேசி ஓ.டி.பி.யை கேட்டு ரூ19998 பணம் மோசடி பற்றி புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்த புத்தகரம் லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கீதா (31) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2நாட்களுக்கு முன் இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் தனியார் வங்கியின் மேலாளர் பேசுவதாகவும் உங்களது ஏ.டி.எம். கார்டு காலாவதியாக உள்ளதாக கூறியுள்ளார்.
இதனை புதுப்பிக்க வேண்டும் என்பதால் சங்கீதாவும் அனைத்து விவரங்களையும் கூறிய பின்னர் தமது செல்போனிற்கு வந்த ஓ..டிபி.யையும் கூறியுள்ளார். அடுத்தடுத்து 4முறை சங்கீதாவிடம் ஓ.டி.பி.யை கேட்டு பெற்று வங்கி கணக்கில் இருந்து ரூ19998 ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட வங்கியில் இதுபற்றி சங்கீதா கேட்ட போது அவர்கள் யாரும் அப்படி பேசவில்லை என கூறியபோது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சங்கீதா இதுபற்றி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் ஆன்லைனில் ஏமாற்றி தன்னிடம் ₹.19998 பணம் பறிபோனதாகவும், இது தன்னுடைய இரண்டு மாத சம்பள பணம் என்றும் தனது பணத்தை மீட்டு தரும்படி குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் ஏமாற்றிக் கொண்டு தான் இருப்பார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் என்ன தான் இதுபோன்று பேசினாலோ ஓ.டி.பி. எண் கேட்டாலோ தகவல்களை பரிமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டாலும் ஏமாறுபவர்கள் போதிய விழிப்புணர்வு இன்றி ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.