தொடர் மின்வெட்டு! செங்குன்றத்தில் சாலை மறியல்!
சாலையை மறித்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
அண்மையில் சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேர தொடர் மின்தடை அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, மதுரவாயல், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான கள்ளிகுப்பம், மேனாம்பேடு, புதூர், பாணுநகர், லெனின் நகர், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரம்பரப்பு ஏற்பட்டது.
இதனிடையே ஆத்திரமடைந்த பொதுமக்கள் கள்ளிகுப்பம், அருகே அம்பத்தூர், செங்குன்றம், பிரதான சாலையை மரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி போராட்டக் களமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் காவல்துறையினர் உடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காலை வேலைக்கு செல்வோர் இரவு நேரத்தில் வெயிலின் வெப்பம் காரணமாக வீட்டில் நிம்மதியாக உறங்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அம்பத்தூரில் தொடர்ந்து ஏற்படும் இரவு நேர மின்வெட்டை பொறுத்துக் கொள்ளாமல் பொதுமக்கள் ஒன்று திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் ஆனது தொடர்ந்து நடைபெற்றது இதனால் அம்பத்தூர் பிரதான சாலை போராட்ட களம் போல் காட்சி அளிக்கிறது, பின்னர் போலீசார் மீண்டும் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி இதன் மீது நிச்சயமாக தகுந்த அதிகாரியிடம் தெரிவித்து விரைவில் பிரச்சனையை சீர் செய்து தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.