காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி யுவராஜ் தேர்வு

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி யுவராஜ் தேர்வு
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் தேர்தலில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், திமுக அறிவித்த வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இரு தினங்களுக்கு முன்பு பதவி ஏற்ற நிலையில் , இன்று மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரை எதிர்த்து அதே திமுக கட்சியை சேர்ந்த டாக்டர் சூர்யா சோபன்குமார், வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது அதன் பின், மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான நாராயணன் தலைமையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதன்பின் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மகாலட்சுமி யுவராஜ் இருபத்தி ஒன்பது வாக்குகளும் , சூர்யா சோபன் குமார் 20 வாக்குகளும், ஒரு செல்லாத வாக்குகளும் என முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம், 9 வாக்குகள் வித்தியாசத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக மகாலட்சுமி யுவராஜ் அறிவிக்கப்பட்டு , நகராட்சி மேயருக்கான அங்கி மற்றும் வெள்ளியிலான செங்கோல் அளிக்கபட்டு பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , ஒன்றிய செயலாளர்கள் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story