செய்யாறு அருகே விஜய நகர அரசர் காலத்தைய மண்டபத்தூண் கண்டெடுப்பு
செய்யாற்றை அடுத்த அரசூா் கிராமத்தில் விஜய நகர அரசு காலத்து சிவன் கோயிலின் முகப்பு மண்டபத் தூண் கண்டெடுக்கப்பட்டது.
செய்யாறு அருகே அரசூரில் விஜயநகர அரசு காலத்து சிவன் கோயிலின் முகப்பு மண்டபத்தூண் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்துள்ளது அரசூர். இந்த ஊரில் விஜயநகர அரசு காலத்து சிவன் கோயிலின் முகப்பு மண்டபத்தூண் ஒன்றை வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் கை. செல்வக்குமார் கண்டெடுத்துள்ளார்.
இது பற்றி மேலும் அவர் கூறியதாவது:-
பழமையான அரசூர் கிராமத்தின் மேட்டுத்தெரு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிட வளாக மதில்சுவரின் பின்புறம் சாக்கடை, குப்பை மேட்டுக்கு இடையில் வேலைப்பாடுகளுடன் கூடிய உயர்ந்த தூண் ஒன்று அதன் மீது மரக்கிளை சாய்ந்து நிற்பதை காண முடிகிறது.
கோவில் முன் மண்டபத் தூண் என அறியப்படும் அத்தூண் தரை மேல் மட்டத்திலிருந்து 294 சென்டிமீட்டர் உயரமும், தடிமன் சுற்றுஅளவு 112 சென்டிமீட்டர் உடையதாகவும் உள்ளது. தூணின் அடிப்பகுதி சதுர வடிவில் உள்ளது. திரிசூலம், நந்தி, விநாயகர், முருகன் ஆகிய கடவுளர்களின் புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த ஊருக்கு சற்று தொலைவில் உள்ள பழஞ்சூரில் விஜயநகர அரசர் காலத்து கல்வெட்டு ஒன்றை தாம் கண்டெடுத்த வகையில், தற்போது புதியதாக சிவன் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இந்தக் கற்றூண் இங்கு கண்டெடுக்கப்பட்டது.
முன் மண்டப ஒற்றை தூண் வடிவத்தின் ஒழுங்குமுறை, சிற்ப வடிவமைப்பு வைத்து இது விஜயநகர காலத்து சிவன் கோயிலின் அடையாளச் சின்னமாகவே கருத முடிகிறது. சிவன் கோயில் இருந்ததாக கூறப்படும் இடத்தில் அரசு சேவை கட்டிடமும், தொடக்கப்பள்ளியும் தற்போது உள்ளது. சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோயில் தடயங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில், எஞ்சி நிற்கும் கோயில் முன் மண்டப ஒற்றை தூண் விஜய நகர கால கட்டிடக்கலைக்கு சாட்சியாக இன்றளவும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.