அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் 7 ம் தேதி துவங்குகிறது.

Update: 2024-07-01 01:11 GMT

அருணாச்சலேஸ்வரர் கோயில்

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும்.

தட்சிணாயின புண்ணியகாலம் , உத்தராயணம் புண்ணியகாலம், தீப உற்சவம், ஆடிபுரம் என கொடியேற்றம் நடைபெறும்.

இதில் சூரியன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக தட்சிணாயின புண்ணிய கால பிரம்மோற்சவ விழா அண்ணாமலையார் திருக்கோயில் முக்கிய விழாவாகும்.

இந்த வருடத்திற்கான ஆனி பிரம்மோற்சவ விழா வருகின்ற 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பூசம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுப தினத்தில் காலை 6:30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கடக லக்னத்தில் அண்ணாமலையார் திருக்கோயில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் விழா நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ஏழாம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை, மாலை விநாயகர், சந்திரசேகர் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

விழாவில் நிறைவு நாளான 16-ந் தேதி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாட்டினை கோயில் இணை , அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள், கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

உலக பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக கருதக் கூடியதுமான அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரையாக திருவண்ணாமலை நோக்கி வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஆகம விதிப்படி கோயில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அருணாச்சலேஸ்வரருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்ப அபிஷேக ஆராதனைகள் செய்தனர். அதனை தொடர்ந்து அதிகாலை மு த ல் பக்தர்கள் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜ கோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாச்சலேஸ்வரர் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே சென்றனர். தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து வெளி பிரகாரம் வரை நீண்டிருந்தது. முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்ய, மூன்றாம் பிரகாரத்தில் இருந்து சிறப்பு தரிசனம் வரிசை ஏற்பாடு செய்யப்பட்டது.

Similar News