திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-02 03:31 GMT

மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் 1433 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய் கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி நிகழ்வுகள் என நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் மக்கள் குறை தீர்வு கூட்டம் வழக்கம்போல் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் பாண்டியன், முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1,109 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மனுக்கள் பெறப்பட்டன

நலத்திட்ட உதவிகள்

இக்கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனு அளித்த பதினைந்து பேருக்கு தலா ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் சுயமாக வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கைகட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சையது பாஷா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உமாபதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌரி ,பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News