திருவள்ளூர்: அடையாளம்பட்டு பகுதியில் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!
திருவள்ளூர் மாவட்டம் அடையாளம்பட்டு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.;
சென்னை மதுரவாயல் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுரவாயில் காவல் உதவி ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அடையாளம்பட்டு ஏரியின் முட்புதர் நிறைந்த பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக குழிதோண்டி கேனில் ஊறல் போட்டு வைத்திருந்ததை கண்டனர்.சுமார் 25லிட்டர் உள்ள அந்த ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.
மேலும் அடர்ந்த புதர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய ஊறல் போட்டு வைத்திருந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு என்பதால் மதுக் கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் வெளி மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னையிலேயே கள்ளச்சாராயம் ஊறல் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.