கல்லூரி மாணவி மரணம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த சேம்பேடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஹேமமாலினி கடந்த 13ஆம் தேதி வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் பூஜைக்காக சென்ற போது மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்த ஆசிரமத்தின் சாமியார் முனுசாமி, தங்களது மகளை பலி கொடுத்து விட்டதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மாணவியின் மரணத்திற்கு காரணமாக சாமியாரை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். காவல்துறையினர் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.