மரங்களை வெட்டுவதை எதிர்த்து ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டம்

சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து பசுமைத்தாயகம் சார்பில் ஒப்பாரி, அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடந்தது.;

Update: 2023-09-01 11:11 GMT

மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தாயகம் அமைப்பு சார்பில்  மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடைபெற்றது.

சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலை இரு புறம் உள்ள மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து பசுமைத்தாயகம் சார்பில் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் முதல் திருநின்றவூர் வரை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலை ஓரத்தில் இருந்த நிழல் தரும் மரங்கள் நெடுஞ்சாலை துறை சார்பில் வெட்டப்பட்டு வருகிறது. அவ்வாறு வெட்டப்பட்ட மரங்களுக்கு ஒப்பாரி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போராட்டம் பசுமைத்தாயகம் அமைப்பு சார்பில் இன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாநில துணை செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் மோகன், மாவட்டத் தலைவர் ஆனந்தன் நிர்வாகிகள் மோகன் , மணிமாறன், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இணைச் செயலாளர் சங்கர் , மாவட்ட ஆலோசகர் சேகர் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.முன்னதாக , வெட்டாதே வெட்டாதே மரங்களை வெட்டாதே, அழிக்காதே அழிக்காதே நிழல் தரும் மரங்களை அழிக்காதே என கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் மரங்களை வெட்டாமல் வேறுடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடுவதை அரசின் கொள்கையாக அறிவிக்க வலியுறுத்தி பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் கொமக்கம்பேடு கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று வெட்டப்பட்ட மரத்திற்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

மரங்களை பாதுகாக்க வேண்டும் என எத்தனையோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் சாலை அபிவிருத்தி பணிகளுக்காக மரங்கள் அழிக்கப்படுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே மரங்கள் வெட்டப்படும் இடத்தில் உடனடியாக புதிய மரக்கன்றுகள் நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மரம் ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

Tags:    

Similar News