மாங்காட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணியை முதன்மை செயலாளர் ஆய்வு

மாங்காட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியை நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.

Update: 2023-10-18 11:48 GMT

மாங்காட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

மாங்காடு நகராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டு அனைத்து துறையினரும் பணிகளை ஒன்றிணைந்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சென்னை மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் காரணமாக மழைநீர் அதிக அளவில் தேங்கி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் மாங்காட்டில் மழைநீர் தேங்காத வகையில் பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பூந்தமல்லி நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் இருந்து வரக்கூடிய மழை நீர் நேரடியாக கல் குவாரியில் சேரும் வகையில் கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஒரு சில இடங்களில் மீண்டும் மழை தேங்குவதால் அந்த மழைநீர் தேங்காத வகையில் மழை நீர் கால்வாய் அமைப்பது குறித்தும் இதே பகுதியில் ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகளையும் நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மழைநீர் தேங்காத வகையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனவும் மழை பொழிவின்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெடுஞ்சாலையை கடந்து மழை நீர் செல்ல அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து பணிகளை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார்.

மாங்காட்டில் பஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது பஸ் நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News