பூந்தமல்லி: பணியில் இருப்பதை மறந்துவிட்டு சீருடையில் தர்பூசணியை திருடுவதில் ஆர்வம் காட்டிய போலீஸ்
பூந்தமல்லியில் பணியில் இருப்பதை மறந்துவிட்டு சீருடையில் தர்பூசணியை திருடுவதில் ஆர்வம் காட்டிய போலீஸ்காரரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பூந்தமல்லி மேம்பாலம் அருகே போலீசார் தடுப்புகளை அமைத்து உரிய ஆவணங்களின்றி வரும் வாகனங்களை மடக்கி சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பூந்தமல்லி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் லோடுவேனில் தர்பூசணி பழம் வைத்திருந்த வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது.
இதனை கண்டு அங்கு பணியில் இருந்த போலீஸ்கார் ஒருவர் பணியில் இருப்பதை மறந்துவிட்டு சீருடையில் அங்கு சென்று அந்த வண்டியில் இருப்பதிலேயே பெரிய தர்பூசணி பழத்தை எடுக்க முயற்சி செய்கிறார்.
இறுதியாக வாகனங்களில் பக்கவாட்டில் உள்ள சிறிய கம்பி வழியாக தனது இரண்டு கைகளை விட்டு தர்பூசனி மேலே எடுக்க முயற்சி செய்தபோது அது வராததால் அதனை அப்படியே அங்கிருந்து உருட்டி வருகிறார்.
அங்கு நிற்கும் மற்றொருவர் அந்த தர்பூசணி பழத்தை எடுத்து போலீசாரிடம் கொடுக்கிறார். போலீசாரும் அந்த தர்பூசணியை பணம் கொடுத்து வாங்கிச் சென்றது போல மிகவும் சந்தோஷமாக எடுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் பணியில் இருக்கும்போதே சீருடை அணிந்தபடியே போலீசார் ஒருவர் வாகனத்தில் இருந்து தர்பூசணியை திருடி செல்லும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.