நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டதற்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என பூவிருந்தவல்லி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்துவிட்டு திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கடந்த வெள்ளி கிழமை பெரம்பூர் செம்பியத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆறு பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். ஆற்காடு சுரேஷ் என்பவரது மரணத்திற்கு பழி தீர்க்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக இது வரை 11 சரண் அடைந்துள்ளனர்.
ஆனால் சரண் அடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல பணத்திற்காக சரணடைந்தவர்கள் என ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதே கருத்தை திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரும் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து சட்டப்படி கடும் தண்டனையை வழங்க வேண்டும் என பூவிருந்தவல்லி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வழக்கறிஞர் ஏகாம்பரம் தலைமையில் பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் ஆம்ஸ்ட்ராங் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நீதி கேட்டு நீதிமன்ற பணிகளை புறக்கணித்துவிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணத்தினால் பூந்தமல்லி-திருவள்ளூர் இடையே கடுப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.