அரசு பிளீச்சீங் பவுடர் குடோனில் தீ விபத்து; 5 தீயணைப்பு வீரர்கள் மயக்கம்
பூந்தமல்லியில் பிளீச்சீங் பவுடர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் மூச்சுத்திணறலால் ஊழியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் அரசு பொது சுகாதார நிறுவனம் உள்ளது. இங்கு நர்சுகள் மற்றும் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பது பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் நர்சுகளை பணிக்கு இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் இந்த வளாகத்தில் பிளீச்சிங் பவுடர்கள் ஏராளமான மூட்டைகள் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த பிளீசிங் பவுடர் வைக்கப்பட்ட குடோனிலிருந்து புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் மூட்டைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு அறைகளில் இருந்து வெளியேறினார்கள். இதுகுறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி, மதுரவாயல் மற்றும் எழும்பூர் ஆகிய 3 பகுதியிலிருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மயக்கமடைந்தனர். அவர்களை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பின்னர் ஒரு வழியாக தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் எரிந்து கொண்டிருந்த பிளச்சிங் பவுடர் மூட்டைகளை பத்திரமாக அப்புறப்படுத்தி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் மூச்சுத்திணறல் கண்ணெரிச்சல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நேரத்தில் பிளீச்சிங் பவுடர் வினியோகம் செய்யாததால் தீ விபத்திற்கு காரணம் என தெரியவந்தது.