பூந்தமல்லி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு
பூந்தமல்லி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தான்.
பூந்தமல்லியில் மர்ம காய்ச்சலுக்கு எட்டு வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த சென்னீர்க்குப்பம், பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சக்தி சரவணன்(வயது8). கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காய்ச்சல் குறையாத காரணத்தினால் சிறுவனை மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சக்தி சரவணன் பரிதாபமாக இறந்து போனான்.முதற்கட்ட விசாரணையில் டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலையால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்து போனதாக மருத்துவர் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. எனவே சிறுவனின் இழப்பிற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மர்ம காய்ச்சலுக்கு எட்டு வயது சிறுவன் பலியான சம்பவம் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் சமீபத்தில் பெய்த சிறிய மழைக்கு தாங்கள் பகுதியில் ஆங்காங்கு சிறிய பள்ளங்களில் மழைநீர் தேங்கி இருப்பதாகவும், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரங்களில் அவை கடிப்பதால் காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படுகின்றது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே சிறுவனுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் உயிரிழந்ததாகவும், தாங்கள் பகுதியில் மருத்துவ குழுவினர் வந்து முகாமிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.