ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலக்கு
ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் முன் கள பணியாளர்களுக்கு கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக பூஸ்டர் தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
உடன் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி, ஆகியோர் உடன் இருந்தனர். இந்த முகாமில் முன்கள பணியாளர்களுக்கு தொடங்கி வைத்தார். பின்னர் அவர்களுக்கு தடுப்பூசி எவ்வாறு செலுத்தப்படுகிறது என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்த பின்னர் பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்தில் தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ஆக்சிஜன் மையத்தில் இருந்து சுமார் 7.7 லட்சம் மக்கள் தொகை கொண்ட இருபத்தி எட்டு கிராம பஞ்சாயத்துகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த ஆக்சிசன் மையத்தில் இருந்து பூந்தமல்லி தாலுகாவில் உள்ள 13 அரசு மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் 5 லட்சத்து 52 ஆயிரத்து754 பேர், இந்த எண்ணிக்கை ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் என்ற இலக்கை தொட இருக்கிறது இதனை செயல்படுத்த வியாழன்தோறும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது 600 இடங்களில் நடைபெற்று வருகிறது. பூந்தமல்லியில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியானது ஒரு இயக்கமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு தடுப்பு முகாம்களிலும் 15 லட்சம் முதல் 30 லட்சம் வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
வரும் சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.