மாடு மீது இருசக்கர வாகனம் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு
பூந்தமல்லி அருகே மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
விபத்தில் உயிரிழந்த மோகன்.
பூந்தமல்லி அருகே சாலையில் நின்றிருந்த மாட்டின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, திருவேங்கடம் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 45). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். மோகன் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் நின்று கொண்டிருந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து கிடந்தார். இதனை அறிந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மோகன் ஏற்கனவே வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவர் மாட்டின் மீது மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.