பூந்தமல்லி நகரத்திற்குள் நுழையும் அனைத்து சாலைகளும் மூடல்
அரசு பணிக்கு செல்லும் ஊழியர்களையும் அனுமதிக்காததால் கடும் வாக்குவாதம்.
கொரோனா பரவல் தாக்கம் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் 12 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் கடைகளின் திறப்பு 10 மணி ஆக குறைக்கப்பட்டது.
மேலும் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் பூந்தமல்லி நகராட்சியின் நுழைவு வாயிலான குமனன்சாவடி மற்றும் கரையான்சாவடி, அம்பேத்கர் சிலை ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் ஏதும் செல்லாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட நேரத்தை மீறி செல்லும் வாகனங்கள் பரிசோதனை செய்யப்படுகிறது. வாகனங்களின் சாவிகளை எடுத்து உரிமையாளர்கள் செல்போன்களும் பறிக்கப்பட்டு, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மூன்று மணி நேரத்திற்கு பின்பு வாகனங்கள் விடுவிக்கப்படுகிறது. மேலும் அரசு பணிக்கு செல்பவர்களையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.
ஆம்புலன்ஸ் மருத்துவ உதவிக்கு என்று வாகனங்கள் சென்றால் மட்டுமே வழியை திறக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர். அரசு பணிக்கு செல்லும் அடையாள அட்டையை காண்பித்தும் அனுமதிக்காததால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ஒருவழியாக அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸ்காக கதவை திறந்த போது அதனை பயன்படுத்தி சிலர் அந்த வழியாகச் சென்றனர். இருப்பினும் வாகனங்களை போலீசார் அனுமதிக்காததால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவி வருகிறது.
அரசு எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும் பூந்தமல்லி பகுதியில் கட்டுப்பாடுகள் இன்றி வாகனங்கள் சுற்றி திரிவதை காணமுடிகிறது.
போலீசாருடன் சேர்ந்து தாசில்தார் சங்கர் மற்றும் வருவாய் துறை, நகராட்சி ஊழியர்கள் சேர்ந்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களை அபராதம் விதிக்கின்றனர்.