திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
திருவேற்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவேற்காடு பகுதியில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பூட்டை உடைத்து திருடி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு, மகாசக்தி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் வினோத்(வயது 24), சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு மாலை இவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சைடு லாக்கை உடைத்து திருடி சென்றனர்.
சத்தம் கேட்டு விழித்து கொண்ட வினோத் மற்றும் அவரது தந்தை மோட்டார் சைக்கிள் திருடி செல்வதை அறிந்து திருடர்களை விரட்டி சென்றனர். மர்ம நபர்களை விரட்டி சென்றும் அவர்களை பிடிக்க முடியாமல் போனது. இது குறித்து திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் பூட்டை லாவகமாக உடைத்து மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற காட்சிகளும் அதன் பின்னாலே அதன் உரிமையாளர்கள் விரட்டிச் சென்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து திருவேற்காடு பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கையில் தாங்கள் பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற இருசக்கர வாகனங்கள் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், குற்றவாளிகளை விரைந்து பிடித்து தங்கள் பகுதியில் அடிக்கடி திருட்டு போன வாகனங்களையும் மீட்டு தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.