மது அருந்தியதை தட்டிக் கேட்டவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை போரூரில் வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டி கேட்டவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-24 09:00 GMT

தடயங்களை சேகரிக்கும் போலீசார்.

போரூர் அருகே வீட்டின் பக்கத்தில் மது அருந்தியதை தட்டி கேட்டவரின் வீட்டில் இரண்டு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம், பொன்னியம்மன் நகர், மரகதாம்பாள் தெருவை சேர்ந்தவர் கவியரசு ( வயது 25), இவரது தம்பி பாலாஜி ( வயது 19). இவரது நண்பர் காரம்பாக்கம் அருணாச்சலம் முதல் தெருவை சேர்ந்தவர் முருகன் ( வயது 20). நண்பர்களான பாலாஜியும், முருகனும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கமாம்.

இந்த நிலையில் நேற்று மாலை பாலாஜியின் வீட்டு வாசலில் அமர்ந்து பாலாஜியும் முருகனும் ஒன்றாக சேர்ந்து மது குடித்துள்ளனர். இதை பார்த்த பாலாஜியின் அண்ணன் கவியரசு இருவரையும் கண்டித்துள்ளார். மேலும் பாலாஜியை கவியரசு மிகவும் கடுமையாக திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், என் நண்பனை என் முன்னாலேயே திட்டுகிறாயா, உன்னை சும்மா விட மாட்டேன் என்று கூறி தகராறு செய்துள்ளார். இதில் முருகனுக்கும் கவியரசுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போதையில் இருந்த முருகன் ஆத்திரத்தில் கவியரசையும் அவரது பெற்றோரையும் ஆபாசமான வார்த்தையில் பேசிவிட்டு ஓடிவிட்டார்.

பின்னர் இன்று அதிகாலை 3 மணி அளவில் கவியரசு வீட்டிற்கு வந்த முருகன் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீட்டுக்கு வெளியே வீசியுள்ளார். அந்த சத்தம் கேட்டு கவியரசு மற்றும் அவரது பெற்றோர்கள் வெளியே வந்து பார்த்தபோது முருகன் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடுவது தெரியவந்தது.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயங்களை சேகரித்தனர். மேலும் இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிய முருகனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

வீட்டு வாசலில் மது அருந்தியதை தட்டி கேட்டதற்காக நண்பரின் வீட்டில் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News