கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட 10 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்
பூந்தமல்லி அருகே வாகன சோதனையில் 10 டன் குட்கா போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லியில் கண்டெய்னரில் கடத்திவரப்பட்ட 10 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு பகுதிகளில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அந்த கண்டெய்னர் லாரியில் மூட்டை, மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை தரக்கூடிய பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்துவரப்பட்டு விசாரணை செய்தனர்.
விசாரணையில் குட்கா பொருட்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து கடத்தி வந்ததும், லாரியை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் விக்னேஷ்(வயது-28).ஓட்டி வந்ததும் மேலும் கடத்திவரப்பட்ட குட்கா பொருட்களை சென்னை,பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களின் மதிப்பு சுமார் ₹.50 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஓட்டுநரை கைது செய்து இந்த குட்கா கடத்தலில் யார், யார் தொடர்பில் உள்ளனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.