மீஞ்சூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
மீஞ்சூர் அருகே வரதட்சனை கொடுமையால் இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த நாலூர் அண்ணா நகரை சேர்ந்த ஓட்டுநரான முத்தழகு ( வயது 30) தமது உறவினரான ரேவதியை ( வயது 26) கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 6.வயதில் ஒரு மகளும், 4வயதில் ஒரு மகனும் உள்ளனர். ரேவதியை அவரது மாமியார் குடும்பத்தினர் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ரேவதி திடீரென விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்த ரேவதியை மீட்டு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேவதியை அவரது மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோர் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி கொடுமை செய்து வந்ததாக ரேவதியின் தந்தை மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியார் கொடுமை தாங்காமல் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.