பொன்னேரி அருகே மின் கம்பம் மீது லாரி மோதி பெண் காயம்
பொன்னேரி அருகே மின் கம்பம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் காயம் அடைந்தார்.;
விபத்தில் காயம் அடைந்த பெண்.
பொன்னேரி அருகே அடையாளம் தெரியாத லாரி மின்கம்பம் மீது மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது மின்சார கம்பி விழுந்ததில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொடூரில் வசித்து வருபவர் பட்டம்மாள் (வயது35). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதி அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டது. லாரி மோதியதில் சேதமடைந்த மின்கம்பம் முறிந்து நடந்து சென்ற பட்டம்மாள் மீது மின்கம்பியுடன் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி பட்டம்மாள் இடது கையில் லேசான காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து சாலையில் விழுந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தினர். மின்சாரம் தாக்கியதில் லேசான காயம் ஏற்பட்ட பட்டம்மாள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சாலையில் நடந்து சென்ற பெண் மீது மின்கம்பம் முறிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக பொன்னேரி போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மின் கம்பத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.