சோழவரம் அருகே அங்கன்வாடி மையம் கட்டித்தர கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
சோழவரம் அருகே அங்கன்வாடி மையம் கட்டித் தரகோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழவரம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்டவற்றை கட்டி தரக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை அதிகாரிகள். தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த ஒரக்காடு கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 14.5 ஏக்கர் கிராம நத்தம் புறம்போக்கு நிலம் கடந்தாண்டு வருவாய்த்துறையால் மீட்கப்பட்டது. அந்த இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் உள்ள அடிப்படை கட்டமைப்புகளை செய்து தர பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்காக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி இன்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட திட்டமிட்டனர். அங்கன்வாடி கட்டிடம், நூலகம், விளையாட்டு திடல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நேற்று பூமிபூஜை போடப்பட்டுள்ளதாகவும், விரைவில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி தரப்படும் என வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் நடத்துவதை தற்காலிகமாக கைவிட்ட கிராம மக்கள் விரைவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து விட்டு சாலை மறியலை கைவிட்டு அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.