வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம் நடத்தினர்.;

Update: 2023-07-06 09:59 GMT

வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

திருவள்ளூர் அருகே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் விடுப்பு எடுத்ததாக கிராம நிர்வாக அலுவலர்கள் இருவர் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், சார் ஆட்சியர் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட காரண ஓடை பகுதி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் ராமலக்ஷ்மி என்பவர் கடந்த மாதம் இரண்டு தினங்கள் உயர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் கொடுக்காமல் விடுப்பில் சென்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் இது குறித்து  சங்க நிர்வாகிகளிடம் முறையிட்டுள்ளார்.

அதன்படி சங்க நிர்வாகியும் கும்மிடிப்பூண்டி பகுதி கிராம நிர்வாக அலுவலருமான பாக்கிய சர்மா சார் ஆட்சியரை சந்தித்து இது தொடர்பாக கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இதன் காரணமாக அவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்காலிக பணி  நீக்க நடவடிக்கையைதிரும்ப பெற கோரி சார் ஆட்சியரை சந்தித்து முறையிட வந்தனர்.

நீண்ட நேரம் ஆகியும் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைக்காததால் ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து சங்க நிர்வாகிகளுடன் உயர் அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் பிரச்சனைக்கு சுமுக தீர்வு காண்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு நிர்வாக அலுவலர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News