ஊத்துக்கோட்டை: மதுபாட்டில் மூட்டையை தலையில் வைத்து சுற்றியவர் கைது!
ஊத்துக்கோட்டையில் மது பாட்டில் மூட்டையை தலையில் வைத்து சுற்றி திரிந்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.;
2 நாட்களாக ஊடரங்கை மீறி தேவையில்லாமல் சுற்றித் திரியும் வாகனங்களை ஊத்துக்கோட்டையில் போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் மது பாட்டில்களை கடத்த முடியாமல் சிலர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் காய்கறி, மளிகைப் பொருட்களுடன் கூடிய மூட்டையை தலையின் மீது வைத்து சுமந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் சேர்ந்து ரோந்து சென்றனர். சந்தேகத்தின் பேரில் அவரை தடுத்து நிறுத்தி மூட்டைகள் சோதனை செய்தபோது 40 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில். சென்னை மாதாவரத்தை சேர்ந்த சின்னமணி என்பது தெரியவந்தது.
மேலும் மோட்டார் சைக்கிள்களில் ஆந்திர மதுபாட்டில்களை கடத்திய பூந்தமல்லி அருகே உள்ள வில்லிவாக்கத்தை சேர்ந்த சாந்தகுமார் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வாயலூர் குப்பத்தைச் சேர்ந்த ஐய்யப்பன் ஆகியோர் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 154 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். 2 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்திய பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்ணபுரம் கிராமத்தை சேர்ந்த வனராயன் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரை போலீசார் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.