மீஞ்சூர் அருகே நாய்கள் கடித்து குதறியதில் காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை

மீஞ்சூர் அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

Update: 2024-10-09 10:00 GMT

நாய்கள் கடித்ததில் காயம் அடைந்த சிறுவனுக்கு  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கௌஷிக்

மீஞ்சூர் அருகே நாய்கள் கடித்து குதறியதில் காயமடைந்த 6வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அருகே ராமாரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த தடாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ராஜ்குமார் என்பவரது (6வயது) மகன் கௌஷிக் அங்குள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று காலை தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக வெளியே வந்த போது பக்கத்து வீட்டில் வளர்த்து வரும் 2நாய்கள் சிறுவனை சுற்றிவளைத்து கடித்து குதறியுள்ளன.

சிறுவன் நாய்களிடம் இருந்து தப்ப முயன்ற போதும் விடாமல் தலையில் நாய்கள் கடித்துள்ளன. இதில் சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் நாய்களை அங்கிருந்து விரட்டினர். தொடர்ந்து சிறுவனை மீட்டு சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் வளர்த்து வரும் நாய்கள் அவ்வப்போது பொதுமக்களை கடிப்பது வாடிக்கையாக நடந்து வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News