எண்ணூர் துறைமுகத்தில் பிரபல டயர் தொழிற்சாலையின் டயர்கள் திருட்டு
எண்ணூர் துறைமுகத்தில் பிரபல டயர் தொழிற்சாலையின் டயர்கள் திருடிச்சென்றுள்ளது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

பைல் படம்
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரபல டயர் தொழிற்சாலையில் இருந்து டயர்களை ஏற்றுமதி செய்வதற்காக கண்டெய்னரில் ஏற்றப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் சீலிடப்பட்டு கண்டெய்னர் லாரி மூலம் கடந்த பிப்ரவரி மாதம் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு கப்பலில் ஏற்றப்பட்ட 1500 டயர்கள் அடங்கிய கண்டெய்னர் பிரேசில் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பிரேசில் நாட்டில் பரிசோதித்த போது அதில் டயர்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக டயர் தொழிற்சாலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து டயர்களை ஏற்றுமதி செய்த முகவர் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியை ஆய்வு செய்ததில் லாரி தேவையின்றி பல்வேறு இடங்களில் நின்று தாமதமாக காமராஜர் துறைமுகத்திற்கு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் சார்பில் பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் 8.29லட்ச ரூபாய் மதிப்பிலான 495டயர்கள் திருடு போனது குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.