திருவேங்கடாபுரத்தில் ஐயப்ப சுவாமியின் 41ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை
பொன்னேரி அருகே திருவேங்கடாபுரத்தில், அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் 41ஆம் ஆண்டு விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரத்தில், உள்ள அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. 41ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜையை முன்னிட்டு திருவேங்கடாபுரத்தில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் விழா தொடங்கியது.
இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்குகளை கையில் ஏந்தியபடி ஸ்வாமியே சரணம் ஐயப்பா என சரண கோஷம் முழங்க, சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் வரை ஊர்வலமாக சென்றனர். ஊர்வல சுற்றுப்பாதையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்ப சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விளக்கு பூஜையின் போது நடைபெற்ற இரவை பகலாக மாற்றிய வான வேடிக்கைகள் காண்போரை கண்கவர்ந்தது.
கேரள பாரம்பரிய வாத்தியமான செண்டை மேளம் மற்றும் பக்தர்களின் சரண கோஷம் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த திருவிளக்கு பூஜையில், திருவேங்கடாபுரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.